Sep 28, 2009

பங்களாதேஷ் விவசாய நிறுவனமொன்றின் ஊடாக புலிகள் விமானங்கள் கொள்வனவு: திவயின தகவல்


பங்களாதேஷ் விவசாய நிறுவனமொன்றின் ஊடாக தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு விமானங்களைக் கொள்வனவு செய்துள்ளனர் என திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
செக் குடியரசிடமிருந்து பங்களாதேஷ் விவசாய நிறுவனத்தின் ஊடாக ஸ்லிம் 143 ரக விமானங்களை தமிழீழ விடுதலைப் புலிகள் கொள்வனவு செய்துள்ளனர்.

செக் குடியரசைச் சேர்ந்த இரகசிய பொலிஸாரினால் இலங்கை பாதுகாப்பு தரப்பினருக்கு வழங்கிய அறிக்கையில் இந்தத் தகவல்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

குறித்த விமானங்களை பங்களாதேஷிலிருந்து இந்தோனேஷியாவிற்கு கப்பல் மூலம் அனுப்பியதாகவும், பின்னர் பாகங்களாக பிரிக்கப்பட்ட விமானங்கள் முல்லைத்தீவு கடல் ஊடாக இலங்கைக்கு புலிகள் கொண்டு வந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

தமிழீழ விடுதலைப் புலிகளினால் கொழும்பு நகர் மீது நடத்திய வான் தாக்குதல்களின் போது படையினரால் சுட்டு வீழ்த்தப்பட்ட விமானங்களின் இயந்திர இலக்கத்தை கொண்டு இந்தத் தகவல்கள் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.

புலிகள் எரித்திரியாவிடம் ஆயுதக் கொள்வனவுக்கு நோர்வே ஒத்துழைப்பு வழங்கியதாம்: கொழும்பு ஆங்கில பத்திரிகை தகவல்


தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு எரித்திரியாவிடம் ஆயுதங்களை கொள்வனவு செய்வதற்கு நோர்வே அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்கியுள்ளதாக இலங்கையின் முன்னணி ஆங்கிலப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

சீனாவிடமிருந்து ஆயுதங்களை கொள்வனவு செய்து அவற்றை எரித்திரியா புலிகளுக்கு வழங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

எரித்திரிய பிரதிநிதிகளுக்கும், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான சந்திப்புக்களை நோர்வே அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் ஒழுங்கு செய்திருந்ததாகக் குறிப்பிடப்படுகிறது.

ஐக்கிய நாடுகளின் உறுப்பு நாடு ஒன்றில் குழப்ப நிலையை ஏற்படுத்த நோர்வே அரசாங்கம் மேற்கொண்ட முயற்சிகள் குறித்து சர்வதேச நாடுகள் விசாரணை நடத்த வேண்டுமென அரசாங்கத் தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குமரன் பத்மநாதனிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் மூலம் எரித்திரியாவுடனான தொடர்பு ஏற்கனவே உறுதிப்படுத்தப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

தமிழீழ விடுதலைப் புலிகள் கடற்படை வளத்தை அதிகரிக்கவும் நோர்வே ஒத்துழைப்பு வழங்கியதாகக் குறிப்பிடப்படுகிறது.

யுத்த நிறுத்தக் காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு நோர்வே அரசாங்கம் பல்வேறு வழிகளில் ஒத்துழைப்பு வழங்கியுள்ளதாக அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.