Nov 21, 2009

இலங்கையில் பொருளாதார வீழ்ச்சி அனைவரையும் பாதிக்கும் - சர்வதேச நாணய நிதியம் எச்சரிக்கை

இலங்கையில் ஏற்படக்கூடிய பொருளாதார வீழ்ச்சி அனைவரது வாழ்க்கையையும் மிக மோசமாக பாதிக்கும் என்று சர்வதேச நாணய நிதியம் எச்சரிக்கை செய்துள்ளது. இந்த நிலைமை காரணமாக இலங்கைக்கு பொருளாதார உதவி வழங்குவதென இந்த நிதியம் தீர்மானித்துள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைப் பணிப்பாளர் மனித உரிமைகள் கண்காணிப்பகத்திற்கு எழுதிய கடிதம் ஒன்றில், எந்தவொரு நாட்டிலும் பொருளாதார வீழ்ச்சி ஏற்படும் போது மிகவும் பாதிப்படையும் நிலையில் உள்ளவர்களே மேலும் மோசமாக பாதிக்கப்படுகிறார்கள் என்று தெரிவித்ததாக நிதியத்தின் வெளியுறவுத் திணைக்கள பணிப்பாளர் கரோலின் அற்கின்சன் ஊடகவியலாளர்களின் கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையில் தெரிவித்துள்ளார். முகாமைப்பணிப்பாளரின் நவம்பர் 5ஆம் திகதிய அறிக்கையில் "மனித உரிமைகள் நிலைமை பற்றிய ஒருவரது அபிப்பிராயம் எப்படி இருந்தாலும்' என்று குறிப்பிடப்பட்டதன் அர்த்தம் சர்வதேச நாணய நிதியம் மனித உரிமை பேணலை கவனத்தில் எடுப்பதில்லை என்பதா? என்று அற்கின்சனிடம் கேட்கப்பட்டது. இந்தக் கூற்று மற்றவர்களை தவறான வழியில் இட்டுச் செல்கிறதா? என்பது மற்றுமொரு கேள்வியாகும். முகாமைப் பணிப்பாளர் மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் கடிதத்திற்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டிருந்தார் என்பதும் கவனிக்கத்தக்கது. மேலும் மனித உரிமைகள் பேணலின் முக்கியத்துவம் பற்றிய முகாமைப் பணிப்பாளரின் உணர்வையே அவரது கடிதத்தின் உள்ளடக்கம் நேரடியாக எடுத்துக் காட்டுகிறது என்றும் அற்கின்சன் தெரிவித்தார்.

மேலும், இலங்கையில் தற்போது சரியோ பிழையோ எது நடந்தாலும் ஒரு பொருளாதார வீழ்ச்சி அனைவரின் வாழ்க்கையையுமே பாதிக்கும் என்பதே உண்மையாகும் என்று அற்கின்சன் ஊடகவியலாளர்களுக்கு பதிலளித்தார்.

நலன்புரி நிலையங்கள் அனைத்தும் திறந்த முகாம்களாக்கப்படும் : பசில்



புலிகளுடனான போரின் போது அகதிகளாக்கப்பட்ட மக்களுக்கு விமோசனம் ஏற்படுத்தும் முகமாக, எதிர்வரும் டிசம்பர் முதலாந் திகதி அனைத்து நலன்புரி நிலையங்களும் திறந்த முகாம்களாக்க மாற்றுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும், வடக்கின் வசந்தம் செயலணியின் தலைவருமான பசில் ராஜபக்ஷ இதனைத் தெரிவித்தார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அறிவுறுத்தலின் பேரில் இந்த அறிவிப்பை வெளியிடுவதாக பசில் ராஜபக்ஷ தெரிவித்தார்.

செட்டிக்குளத்திற்கு விஜயம் செய்த பசில் ராஜபக்ஷ அமைச்சர்களான றிசாத் பதியூதீன், பீலிக்ஸ் பெரேரா, வடமாகாண ஆளுனர் ஜீ.ஏ. சந்திரசிறி ஆகியோர் இராமநாதன் நிவாரணக் கிராமங்களில் தங்கியுள்ள மக்களுடன் கருத்துப் பரிமாறல்களை மேற்கொண்டனர்.

இதனையடுத்து பசில் ராஜபக்ஷ தெரிவிக்கையில்,

"2010 ஆம் ஆண்டு ஜனவரி 31 ஆந் திகதிக்குள் நடைமுறையிலுள்ள அனைத்து நலன்புரி நிவாரணக் கிராமங்களிலுமுள்ள மக்கள் அவர்களது சொந்த பிரதேசங்களில் மீள் குடியமர்த்தப்படுவர்கள். அத்துடன், டிசம்பர் மாதம் முதலாந் திகதி முதல் அங்குள்ள மக்கள் சுதந்திரமாக எவ்வித கெடுபிடிகளுமின்றி நடமாடும் வகையில் அவை திறந்த முகாம்களாக மாற்றப்படும்.

தற்போது மீள்குடியேறும் மக்களுக்கு வழங்கப்படும் 25ஆயிரம் ரூபா கொடுப்பனவு 50ஆயிரமாக டிசம்பர் மாதம் 15 ஆம் திகதி முதல் அதிகரிக்கப்படும்.

மேலும் வன்னியிலிருந்து பயங்கரவாதிகளின் பிடியிலிருந்து விடுபட்டு அரசாங்கத்தின் பாதுகாப்பைத் தேடி வந்த மக்களுக்கு எமது ஜனாதிபதி தலமையிலான அரச பாதுகாப்புத் தரப்பு அதிகாரிகளும் முழுமனதுடன் அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்துள்ளதை இவர்கள் ஒருபோதும் மறந்து விட மாட்டார்கள்.

நிவாரணக் கிராமங்களில் இருந்து இடம் பெயர்ந்த 2 லட்சத்து 80ஆயிரம் மக்களின் தொகை இன்று 50 சதவீதத்தைக் கொண்டுள்ளது. இதற்கு அரசாங்கத்தின் நேர்மையான தூய்மையான மீள்குடியேற்ற கொள்கையே காரணமாகும்.

அந்த வகையில் கிழக்கு மாகணத்தில் இடம் பெயர்ந்த மக்களை மிகவும் துரிதமாக நாம் மீளகுடியமர்த்தினோம். இன்று பல நாடுகளிலும் அகதி முகாம்கள் பல வருட காலமாக காணப்படுகின்றன. அம்மக்கள் தொடர்ந்தும் முகாம்களிலேயே அகதிகளாக வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

ஆனால் எமது அரசாங்கம் இடம்பெயர்ந்த இம்மக்களது நலனில் அதிகூடிய அக்கறை செலுத்தி உட்கடடமைப்பு வசதிகள் உட்பட ஏனைய தேவைகளையும் பெற்று கொடுத்துள்ளது" என்றார்.

இந்நிகழ்வில் மீள்குடியேற்ற, அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் றிசாத் பதியுதீனும் உரையாற்றினார்.

கொழும்பில் சில பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியது